ஓவியம் ராஜா
கட்டுரை

மனசாட்சி!

அசோகன்

தன் அக்கா சண்முகசுந்தரம் அம்மையாரின் மகன் மீது அவருக்குக் கொள்ளைப்பிரியம். சின்னவயதிலிருந்தே அக்கா மகனை தோளில் தூக்கி வளர்த்தார். அவரோ எட்டாம் வகுப்பைத் தாண்டவில்லை.

ஆனால் தன் மருமகன் எம்.ஏ.வரை படித்து பெருமளவில் சிறந்த நூல்களைப் படிப்பதில் ஆர்வம் கொண்டிருப்பது கண்டு பெரும் மகிழ்வு கொண்டார். திரைப்படத்துறையிலும் அவன் வசனம், தயாரிப்பு என ஜொலிப்பது கண்டு பெருமிதம் கொண்டார். எந்த காலத்திலும் மருமகன் மாமா இட்ட கோட்டைத் தாண்டியதில்லை; மாமாவும் மருமகனைக் கலக்காமல் எதுவும் செய்வதில்லை.

திமுக தலைவர் கருணாநிதி- முரசொலி மாறன் இடையிலான உறவு என்பது அதிகாரவுலகில் ஓர் அதிசயமான ஒன்றுதான். அரசியலில் கருணாநிதிக்குப் பக்கபலமாக மாறனின் உதவி என்பது 1969-ல் அண்ணா மறைவுக்குப் பின்னால் நெடுஞ்செழியனைத் தாண்டி அவர் முதல்வர் நாற்காலியில் அமர எம்ஜிஆர் உள்ளிட்டோரின் ஆதரவைக் கொண்டுவந்ததில் மறைமுகமாகப் பங்காற்றியதில் தொடங்கியது என்பார்கள்.

சென்னை பச்சையப்பா கல்லூரியில் எம்.ஏ. பொருளாதாரம் படித்த மாறன் அப்போதிருந்தே கையெழுத்துப் பத்திரிகைகள் நடத்துதல், முரசொலி பத்திரிகை வேலைகளைப் பார்த்தல் என்று இருந்தவர். மாறனாக இருந்தவர் முரசொலி மாறன் என்று ஆனதும் கருணாநிதியின் ஆலோசனையின் பேரிலே. 1965-ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் பங்குகொண்டவர். 1967-ல் நாடாளுமன்றத்துக்கு அண்ணாவிடம் சொல்லி கருணாநிதி சீட் வாங்கித் தந்து அவரை டெல்லிக்கு அனுப்பியதிலிருந்து மாறன், மரணத்தைத் தழுவும்வரை நாடாளுமன்றத்தில் திமுகவின் குரலாக இருந்தார்.

அண்ணா தென்சென்னை தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்கு 1967-ல் தேர்வானார்.  அதேசமயம் திமுக சட்டமன்றத் தேர்தலில் வென்றதால் முதல்வர் பதவியை ஏற்க தன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகினார். அந்த இடத்துக்குத்தான் அண்ணாவிடம் பேசி மாறனை நிறுத்தச் செய்தார் கருணாநிதி. அவரது வேட்புமனுவை முன்மொழிந்தவர்கள் யார் யார் தெரியுமா? ராஜாஜி, காயிதே மில்லத் மற்றும் அண்ணா!

மாறன் டெல்லிக்குப் போனபோது அங்கே திமுக சார்பில் செழியன், க.ராசாராம், நாஞ்சில் மனோகரன் உள்ளிட்டவர்கள் இருந்தார்கள். கருணாநிதி முதல்வர் ஆனபின்னர் மெல்லமெல்ல திமுகவின் குரலாக மாறனே மாறினார். 1971 தேர்தலில் இந்திரா காங்கிரசுடன் திமுக கூட்டணி வைத்த காலங்களில் அது  சின்னதாகத் தொடங்கியது. எமர்ஜென்சி சமயத்தில் மாறன் கைது செய்யப்பட்டு தாக்குதலுக்கு உள்ளானதிலேயே அவர் மீது மற்றவர்கள் எவ்வளவு காழ்ப்புணர்வு கொண்டிருந்தார்கள் என்பது விளங்கும். 1980-ல் மீண்டும் இந்திராகாந்தியுடன் திமுக உறவை உருவாக்கியதிலும் முரசொலிமாறன்தான் பெரும் பங்கு வகித்திருந்தார்.

1977-ல் இருந்து 1989 வரை திமுக தமிழ்நாட்டில் ஆட்சியில் இல்லாத காலகட்டத்தில் கருணாநிதியுடன் இணைந்து கட்சிப் பணி, முரசொலி நிர்வாகம் என செயல்பட்டவர்.  கருணாநிதியின் மருமகன் என்பதற்காகத்தானே அவருக்கு இவ்வளவு மரியாதை என கட்சிக்குள் புகைச்சல்கள் இருந்தாலும்கூட ஒரு கட்டத்தில் அது மறைந்து அவரது கட்சிப்பணி ஒங்கி நின்றது. 89ல் மத்தியில் விபிசிங்குடன் கூட்டணி வைத்தபோது, தமிழ்நாட்டில் திமுக எந்த இடமும் வெல்ல இயலவில்லை. இருந்தபோதிலும் ராஜ்யசபா எம்பியாக இருந்த முரசொலிமாறனுக்கே விபிசிங் மத்திய அமைச்சரவையில் இடம் தந்தார்.

பின்னர் தேவகவுடா, குஜ்ரால் ஆகியோர் பிரதமர்கள் ஆனபோது, அந்த சமயங்களில் மாறனின் செயல்பாடு முக்கியமானது. திமுகவின் வரலாற்றில் அது மத்திய அரசில் பெரும்பங்கு வகிக்க ஆரம்பித்ததும் அதிகாரத்தை ருசித்ததும் 1999-ல் வாஜ்பாய் அரசுக்கு ஆதரவளித்தபோதுதான். கொள்கைகளால் எதிரெதிர் முகாம்களில் இருந்த திமுகவையும் பாஜகவையும் கூட்டணிசேர்க்க வாஜ்பாயுடன் பேசியதுடன் மாமாவையும் சம்மதிக்க வைத்து கட்சியையும் ஒப்புக்கொள்ள வைத்தவர் முரசொலி மாறன் தான். எந்தக் கட்சியும் தீண்டத்தகாதது அல்ல என்பதே அவரது ஒரே விளக்கம்.

மாறன் சட்டமன்றத்தில் என்றுமே உறுப்பினர் ஆனவரில்லை. ஆனால் ஆளுங்கட்சியாக இருக்கையில் தமிழ்நாட்டு அரசியலில் அமைச்சர்கள், அதிகாரிகள் செயல்பாடுகளை வெளிப்படையாக விமர்சிப்பார். அவரை தன் மனச்சாட்சி என்று சொல்லும் அளவுக்கு கருணாநிதி அவருக்கு சுதந்தரம் அளித்திருந்தார். அந்த எல்லைகளை அவர் என்றும் மீறியவர் இல்லை. 1989 , 1991, 1996, ஆகிய மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும்  கூட்டணிகள் உருவாக்கம், வேட்பாளர் தேர்வு ஆகியவற்றில் மாறன் முக்கிய பங்குவகித்திருக்கிறார். 1977-ல் இருந்து பெரும்பாலும் திமுகவின் தேர்தல் அறிக்கைகளை மாறன் தான் படைத்திருக்கிறார்.

2001 தேர்தலில் கூட்டணி முடிவுகளை ஸ்டாலின் எடுக்கிறார். சாதிக்கட்சிகள் சேர்ந்த கூட்டணியை அமைக்கிறார். இதை எதிர்த்த மாறன், வேட்பாளர் பட்டியல் வெளியிடும்போது உடல்நலக்குறைவால் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிக்கை விடுத்தார். பல நாட்கள் மாமாவையும் சென்று சந்திக்கவில்லை. பக்கத்து தெருவில் இருந்துகொண்டே மௌனம் சாதித்தார்.  மருமகனைப் பார்க்காமல் மாமன் மருக, அவர்கள் மீண்டும் சந்தித்துக்கொண்டார்கள். அந்த தேர்தலில் அவர் கசப்பை விழுங்கி பிரச்சா ரத்துக்கும் வந்தார். ஆனால் திமுக தோற்றது.

இதையடுத்து கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டபோது, முரசொலி மாறன் காவலர்களால் பந்தாடப்பட்டார்.  வேட்டி அவிழ்ந்த நிலையில் அவர் தடுமாறி நடந்துவந்த காட்சி, அவர் கருணாநிதி மீது கொண்டிருந்த அன்பின் சாட்சி. இந்த தாக்குதலை அடுத்து அவர் உடல் நலிவுற்றார். ஓராண்டுகள் அவர் மருத்துவமலையில் இருந்தபோதும் அவரை இலாகா இல்லாத மந்திரியாகவே திமுக சார்பில் வைத்திருந்தார் வாஜ்பாய். கருணாநிதி வேறு யாருக்கும் அந்தப் பதவியை வாங்கிக் கொடுத்திருக்கலாம். ஆனால் மருமகன் மீது அவருக்கு இருந்த அசாத்திய பிரியத்துக்கு முன் எதுவும் இல்லை!

மாறன் மறைவுக்குப் பின்னால்தான் திமுக டெல்லியில் இருந்த பத்தாண்டுகளில் பெரும் பழியை ஈட்டிக் கொண்டு இன்றும் விழித்துக்கொண்டிருக்கிறது. அவர் இல்லாத வெற்றிடத்தை நிரப்பமுடியாமல் கருணாநிதி தவித்துக்கொண்டிருக்கிறார். “ஏனெனில் மாறன் எல்லா விதங்களிலும்  தன் மாமாவுக்கு உதவியாக இருந்தார். தான்வேறு; மாமா வேறு என்று அவர் நினைத்ததில்லை.  கருணாநிதியின் வெற்றிகளைத் தன்னுடைய வெற்றிகளாக நினைத்தார். என்றைக்கும் அரசியலில் தானொரு தனிசக்தியாக மாறியதில்லை.  டெல்லியில் இருந்து வரும்போது தன் பையைத் தானே எடுத்துவருவார். அவரது காரில் சிவப்பு சுழல் விளக்கு இல்லை. அனாவசியமாக செலவழிக்கவும் மாட்டார். யாருக்கும் செலவு வைக்கவும் மாட்டார். கலைஞரின் வளர்ச்சியில் மாறனுக்கு பெரும் பங்கு உண்டு. அதேபோல திமுக என்ற கட்சிக்கும்  இந்திய நடுவண் அரசியலில் பெரும் வழிகாட்டியாகவும் செயல்படுபவராகவும் இருந்தவர். ஒவ்வொரு  தலைவருக்கும்  இப்படியொரு தன்னை மிஞ்சாதவராகவும் அதேசமயம் தனக்காக எதையும் செய்யக்கூடியவராகவும் ஒரு நபர் தேவை. கருணாநிதிக்குக் கிடைத்தவர் மாறன்” என்கிறார் திமுகவின் மூத்த தலைவர் ஒருவர்.

திரைப்படத்துறையில் செயல்பாடு, முரசொலி பத்திரிகை மூலம் கருணாநிதிக்கு பக்கபலம், டெல்லியில் திமுகவின் நலன்களைக் கவனித்துக்கொண்டது என்றிருந்த மாறன், இறக்கும் வரை தன் மகன்கள் இருவரையும் அரசியலுக்குக் கொண்டுவரவே இல்லை.  இதற்கிடையில் கலாநிதி மாறன் சன் தொலைக்காட்சி யைத் தொடங்கி பெருவளர்ச்சி பெற்றிருந்தார். தயாநிதி, குங்குமம் இதழை நிர்வகித்துக்கொண்டிருந்தார். தயாநிதியை அரசியலுக்கு அழைத்துவந்தவர் கருணாநிதிதான்.  அது அவர் மாறனுக்கு ஆற்றிய நன்றிக்கடன்.

டிசம்பர், 2015.